வர்த்தக துளிகள்.. பிஸ்லெரி நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை கை விட்ட டாடா

 
பிஸ்லெரி - டாடா

டாடா குழுமத்தை சேர்ந்த டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட், நாட்டின் மிகப்பெரிய பேக்கேஜ் குடிநீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை வாங்க  உள்ளதாக தெரிவித்தது.  மேலும், அதற்கான பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத வண்ணம், பிஸ்லெரி நிறுவனத்தை கையகப்படுத்தும் திட்டத்தை கை விட்டு விட்டதாக பங்குச் சந்தை அமைப்பிடம் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

எச்.டி.எஃப்.சி. வங்கியுடன் எச்.டி.எஃப்.சி.  இணைப்பு

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி. வங்கியுடன் நாட்டின் மிகப்பெரிய சொத்து அடமான நிறுவனமான எச்.டி.எஃப்.சி. நிறுவனத்தை இணைப்பதற்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. இணைப்புக்கு பிறகு எச்.டி.எஃப்.சி. வங்கி நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியாக இருக்கும். அதேசமயம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியை காட்டிலும் எச்.டி.எஃப்.சி. வங்கியின் அளவு 2 இரு மடங்கு பெரிதாக இருக்கும்.

அமிதாப் காந்த்

நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக  அதிகாரி அமிதாப் காந்த் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை (பணம் செலுத்துவது) 11 மடங்கு அதிகமாகும், சீனாவுடன் ஒப்பிடும்போது 4 மடங்கு அதிகமாகும். டிஜிட்டல் பேமெண்ட்டுகளை ஊக்குவிப்பதில் மட்டுமல்லாமல், கோவிட்-19 தடுப்பூசி போன்ற பிற அரசாங்க திட்டங்களை வழங்குவதிலும் டிஜிட்டல்மயமாக்கல் ஒரு முக்கிய பங்கை கொண்டுள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வளர்ந்த நாடுகளில் இருந்து வந்திருந்தாலும், இது இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மாடல், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள குடிமக்களின் வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது என தெரிவித்தார்.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மார்ச் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 240  கோடி டாலர் குறைந்து 56,000 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 56,240  கோடி டாலராக இருந்தது.  2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.