வர்த்தக துளிகள்.. வோடாபோன் ஐடியா ஜூனில் 5ஜி சேவையை தொடக்கம்?..

 
வோடாபோன் ஐடியா

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிதவிக்கும் வோடாபோன் ஐடியா நிறுவனம் நிதிக்காக வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது அந்நிறுவனத்தின் நிதி திரட்டும் இறுதி கட்டத்தில் உள்ளது, அடுத்த மாதத்துக்குள் அது முடிவடைந்து விடும். அதே மாதத்தில் வோடாபோன் ஐடியா 5ஜி சேவை தொடங்கும் என்று தொலைத்தொடர்பு துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏர்போட்

பிரபல ஐ போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் ஐபாட்ஸ் மற்றும் மேக் பெர்சனல் கம்ப்யூட்டர்களை (பி.சி.) தயாரிக்கும் திட்டத்தை கொண்டிருக்கவில்லை. ஆனால் ஏர்போட்களை தயாரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராயந்து வருவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மன்சுக் மாண்டவியா

ஜப்பானில் டோக்கியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசுகையில், இந்தியா உலகின் மருந்து மையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய மருந்து துறை 3 ஆயிரம் மருந்து நிறுவனங்கள் மற்றும் 10,500 மருந்து உற்பத்தி ஆலைகள் உள்ளடக்கிய நெட்வொர்க்கை கொண்டுள்ளது. 2030ம் ஆண்டுக்குள் இந்திய மருந்து துறை சந்தை மதிப்பு 13,000 கோடி டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

ஏற்றுமதி,இறக்குமதி

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2023 ஏப்ரல் மாதத்தில் நம் நாட்டின்  ஏற்றுமதி 12.7 சதவீதம் குறைந்து 3,466 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. கடந்த மாதத்தில் நாட்டின் இறக்குமதி 14 சதவீதம் குறைந்து  4,990 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகம்) கடந்த ஏப்ரல் மாதத்தில் 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு 1,524 கோடி டாலராக குறைந்துள்ளது.