வர்த்தக துளிகள்.. மூன்றே நாளில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு 1,137 அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்த டி.எல்.எஃப்.

 
டி.எல்.எஃப்.

பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எஃப்., குருகிராமில் உள்ள அதன் வீட்டுத் திட்டத்தில் ரூ.7 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட விலையுள்ள 1,137 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளை 3 நாட்களுக்குள் ரூ.8 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பிரீமியம் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வலுவாகன தேவையை இது (டி.எல்ட.எஃப். அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை) பிரதிபலிக்கிறது.

கடல் உணவு பொருட்கள்

ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக, உக்ரைனுக்கான இந்தியாவின் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் (2022 ஏப்ரல்-ஜனவரி)  நம் நாட்டிலிருந்து உக்ரைனுக்கு 13.6 லட்சம் டாலர் மதிப்புக்கு கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் அந்நாட்டுக்கு இந்தியாவில் இருந்து கடல் உணவு பொருட்கள் 66 லட்சம் டாலர் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

அஸ்வினி வைஷ்ணவ்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்ற மக்களவையில், நடப்பு நிதியாண்டில் உள்நாட்டு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி ரூ.8.42 லட்சம் கோடியாகவும், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி ரூ.1.76 லட்சம் கோடியாகவும இருக்கும். சர்வதேச அளவில் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 1.2 சதவீதத்தில் இருந்து தோராயமாக 1.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரிவித்தார்.

ஏற்றுமதி,இறக்குமதி
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2023 பிப்ரவரி மாதத்தில் நம் நாட்டின் நாட்டின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (சரக்குகள் மற்றும் சேவைகள்) 6,302 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2022 பிப்ரவரி மாதத்தில் நம் நாட்டில் இருந்து 5,846 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியாகி இருந்தது. 2023 பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த இறக்குமதி (சரக்குகள் மற்றும் சேவைகள்) 6,585 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகம்) கடந்த பிப்ரவரி மாதத்தில் 283 கோடி டாலராக உள்ளது.