வர்த்தக துளிகள்..கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய எஸ்.பி.ஐ...

 
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) அடிப்படை முதன்மை கடனுக்கான வட்டி விகிதத்தை 0.70 சதவீதம் உயர்த்தி 14.85  சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அடிப்படை  வட்டி விகிதத்தை 0.70 சதவீதம் உயர்த்தி 10.10 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் கடன் வாங்கியவர்கள் செலுத்தும் மாதந்திர தவணை தொகை அதிகரிக்கும்.

ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹீரோ எலக்ட்ரிக்  நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது உற்பத்தி ஆலைகளில் இருந்து அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை விற்பனை கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் அண்மையில் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1.3 லட்சம் வரையிலான விலையில் 3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்தது. இந்நிறுவனம் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 20 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட புதிய ஆலையை ரூ.1,200 கோடி முதலீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளது.

ஏற்றுமதி,இறக்குமதி

மத்திய அரசின் தரவுகளின்படி, 2023 பிப்ரவரி மாதத்தில் நம் நாட்டின் சரக்குகள் ஏற்றுமதி  8 சதவீதத்துக்கு மேல் குறைந்து 3,388 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. 2022 பிப்ரவரி மாதத்தில் நம் நாட்டில் இருந்து 3,715 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகள் ஏற்றுமதியாகி இருந்தது. 2022 பிப்ரவரி மாதத்தில் நாட்டின் இறக்குமதி 8 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.5,131 கோடி டாலராக குறைந்துள்ளது. இதனையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகம்) கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,743 கோடி டாலராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி

கோடை காலமான ஏப்ரல்-ஜூன் காலத்தில் நிலக்கரி தேவை அதிகரிக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில், கோடை காலத்தில் மின்சார துறைக்கு (அனல் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு) மொத்தம் 15.60 கோடி டன் நிலக்கரி சப்ளை  செய்வோம் என்று கோல் இந்தியா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேசமயம் பொதுத்துறை நிறுவனமான என்.டி.பி.சி., சப்ளை பற்றாக்குறையை சமாளிக்க எதிர்வரும் நிதியாண்டின் முதல் அரையாண்டில் 54 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்.