வர்த்தக துளிகள்.. சர்வதேச அளவில் ராணுவ ஆயுதங்கள் இறக்குமதியில் இந்தியா முதலிடம்

 
ராணுவ தளவாடங்கள்

சுவீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் அறிக்கையின்படி, 2018 முதல் 2022ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் சர்வதேச அளவில் போர் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் அதிகம் இறக்குமதி செய்ய டாப் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை தொடர்ந்து அடுத்அடுத்த இடங்களில் முறையே சவுதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் உள்ளன.

நிலக்கரி

நடப்பு நிதியாண்டில் கடந்த பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் இந்தியா வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 18.60 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது. அதிகபட்சமாக இந்தோனேஷியாவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்வது இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலிய நிலக்கரி பாதியாக குறைந்துள்ளது என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்

கடந்த பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.85 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 4.73 சதவீதமாக இருந்தது. கடந்த சில மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரியில் சில்லரை விலை பணவீக்கம் 6.44 சதவீதமாக குறைந்துள்ளது.

5ஜி

நம் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி தொலைத்தொடர்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், 5ஜி சேவையின் தடையற்ற வேண்டுமானால், 2023-24ம் நிதியாண்டுக்குள் நாட்டில் 12 லட்சம் தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவ வேண்டும் மற்றும் டவர்களில் 65 சதவீதத்தை பைபர்ஸாக மாற்ற வேண்டும் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.