வர்த்தக துளிகள்.. அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால்.. சிக்னேச்சர் வங்கியை மூடிய அமெரிக்க அரசு

 
சிக்னேச்சர் பேங்க்

அமெரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்  மிகவும் பிரபலமான சிலிக்கான் வேலி பேங்க் (SVB) திவாலானது. இது சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில நேற்று முன்தினம் சிக்னேச்சர் பேங்க்-ஐ (Signature Bank) அமெரிக்க  அரசு மற்றும் வங்கி கட்டுப்பாட்டு ஆணையம் மூடியுள்ளது. அமெரிக்க வங்கிகள் தொடர்ந்து திவாலாகி வருவது அந்நாட்டு நிதிச் சந்தையை மட்டுமல்ல உலக நாடுகளின் நிதிச் சந்தையையும் பாதிக்கும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய்

கடந்த பிப்ரவரி மாதத்தில் நம் நாடு ரஷ்யா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு மொத்தம் 49.4 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி ரஷ்யாவில் இறக்குமதி செய்யப்பட்டது. அதாவது ரஷ்யாவில் இருந்து நாள் ஒன்றுக்கு 17.2 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதிகளவு ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியால், நம் நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஆப்பிரிக்க கச்சா எண்ணெய் பங்களிப்பு 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல்.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அந்த  கூட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளது டி.பி.எஸ். ரிசர்ச் தெரிவித்துள்ளது. சில்லரை விலை பணவீக்கத்தை கட்டுப்பாட்டு அளவுக்குள் கொண்டு நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாக டி.பி.எஸ். ரிசர்ச் தெரிவித்துள்ளது.

 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் கூறியதாவது: 2022 மார்ச் நிலவரப்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள பண மதிப்பு ரூ.31.33 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2014 மார்ச் மாதத்தில் நாட்டில் ரூ.13 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்தன. 2022 மார்ச் 25ம் தேதி நிலவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் உள்ளடக்கிய புழக்கத்தில் உள்ள பணமதிப்பு 13.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது 2014 மார்ச் மாதத்தில் 11.6 சதவீதமாக இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.