இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

கடந்த பிப்ரவரி மாத சில்லை விலை பணவீக்கம், அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாத சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம இன்று வெளியாகிறது. அந்த மாதத்தின் மொத்த விலை பணவீக்கம் நாளை வெளியாகிறது. வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கி அந்த கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்பான முடிவினை எடுக்கும்போது, கடந்த பிப்ரவரி மாத சில்லரை மற்றும் மொத்த விலை பணவீக்க நிலவரத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்தியாவின் கடந்த பிப்ரவரி மாத வர்த்தக புள்ளிவிவரம் நாளை வெளியாகிறது. மார்ச் 10ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. 

பணவீக்கம்

அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் இந்திய பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இது தொடர்ந்தால் பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக அமையலாம். மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் தகவலின்படி, அதானி டிரான்ஸ்மிஷன் மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்கள் நீண்டகால கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் கட்டமைப்பின்  இரண்டாம் கட்டத்தின்கீழ் வைக்கப்படும். குளோபல் சர்பேஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கி வரும் 15ம் தேதி நிறைவடைகிறது.

கச்சா எண்ணெய்

அமெரிக்காவின் சில்லரை விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் நாளை வெளியாகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். வரும் 22ம் தேதியன்று அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதங்கள் குறித்து முடிவெடுப்பதற்கு முன்  இந்த புள்ளிவிவரம் அமெரிக்க பெடரல் வங்கிக்கு முக்கியமானது.வரும் 16ம் தேதி ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதம் தொடர்பான முடிவை எடுக்க உள்ளது. அதற்கு அடுத்த நாள் (17ம் தேதி) ஐரோப்பிய யூனியனின் கடந்த பிப்ரவரி மாத பணவீக்கம் குறித்த புள்ளிவிவரம் வெளியாகிறது.  ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிட உள்ளன. இதுதவிர,  சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு,  சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.