வர்த்தக துளிகள்.. மத்திய அரசின் கஜானாவை நிரப்பும் நேரடி வரி வசூல்.. ரூ.16.68 லட்சம் கோடி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இந்த நிதியாண்டில் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான காலத்தில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 10 வரை) மொத்த நேரடி வரி வசூல் ரூ.16.68 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 22.6 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நம் நாட்டில் இருந்து மொத்தம் 3.01 லட்சம் இரு சக்கர, பயணிகள் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளது. அதேசமயம் 2022 பிப்ரவரி மாதத்தில் இரு சக்கர, பயணிகள் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மொத்தம் 4.63 லட்சம் ஏற்றுமதியாகி இருந்தது. ஆக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் இரு சக்கர, பயணிகள் வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி 35 சதவீதம் குறைந்துள்ளது என எஸ்.ஐ.ஏ.எம். தெரிவித்துள்ளது.
இந்திய குளிர்பான சந்தையான குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் நுகர்வு சீராக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அனைத்து தயாரிப்பு வகைகளிலும் நிலையான மற்றும் ஆரோக்கியமான அளவு வளர்ச்சியை வழங்கும் என்று பெப்சிகோவின் மிகப்பெரிய பிரான்சிசைஸ் பாட்டிலரான வருண் பீவரேஜஸ் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வீட்டு கடனுக்கான விகிதத்தை 0.20 சதவீதம் குறைத்து 8.40 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. புதிய கடன் வாங்குபவர்களை ஈர்ப்பதற்காகவும், நிதியாண்டு முடிவதற்கு முன்னதாக வங்கியின் கடன் வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மேற்கொண்டுள்ளது.