வர்த்தக துளிகள்.. பழைய சுவை, புதிய பாட்டிலில் கேம்பா கோலா.. கோக், பெப்சிக்கு போட்டியாக களமிறங்கிய முகேஷ் அம்பானி

 
கேம்பா

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கன்சியூமர்ஸ் புராடெக்ட் லிமிடெட், முன்னொரு காலத்தில்  நம் நாட்டில் சக்கை போடு போட்ட மற்றும் பிரபலமான குளிர்பான பிராண்ட் கேம்பா மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸின் கேம்பா குளிர்பானம் அமெரிக்க குளிர்பான நிறுவனங்களான கோகோ கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களுக்கு கடும் போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,  நிறுவனங்களுக்கு இடையே குளிர்பானங்களின் விலை குறைப்பு போட்டியும் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதானி குழும பங்குகள்..

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குழுமத்தின் கடனை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, 45 கோடி டாலர் (சுமார் ரூ.3,700 கோடி) திரட்டும் நோக்கில் அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தில் 4 முதல் 5 சதவீதம் பங்குகளை விற்பனை செய்ய கவுதம் அதானி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை பலப்படுத்தவும், கடன்களை முன்கூட்டியே செலுத்தி குழுமத்தின் அதிக கடன் என்ற கவலையை போக்கவும் இந்த நடவடிக்கை அதானி குழுமம் மேற்கொண்டுள்ளதாக தகவல்.

தொழில்துறை
கடந்த ஜனவரி மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 5.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 ஜனவரியில் தொழில்துறை உற்பத்தி 2 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி கண்டு இருந்தது. 2022 டிசம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி 4.7 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்து. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபிறகு தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரம் வெளியானதால், வரும் வாரத்தில் அதன் தாக்கம் பங்குச் சந்தையில் எதிரொலிக்கும்.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு மார்ச் 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 146  கோடி டாலர் உயர்ந்து 56,240 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 24ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 56,094  கோடி டாலராக இருந்தது.  2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது.