வர்த்தக துளிகள்.. 30 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் வேளாண் சீர்த்திருத்தங்கள்

 
விவசாயி

1991ம் ஆண்டு முதல் இன்று வரை நம் நாட்டில் வேளாண் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் காத்திருக்கின்றன. அதேநேரத்தில் நமது அண்டை நாடான சீனா, 1978ம் ஆண்டிலேயே தனது நாட்டில் வேளாண் சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது. 1991ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் வெளிப்புற காரணிகள் மற்றும் தொழில்துறை தாராளமயமாக்கல் தொடர்பானவை. அவற்றுக்கும் விவசாயத்துக்கும் தொடர்புடையவை என்று பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் தெரிவித்தார்.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து 2வது வாரமாக கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4.40 கோடி டாலர் உயர்ந்து 56,285 கோடி டாலராக அதிகரித்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 56,281  கோடி டாலராக இருந்தது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 35.40  கோடி டாலர் உயர்ந்து 4,132 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. 

வாகனங்கள்

நம்  நாட்டில் கடந்த டிசம்பரில் மாதத்தில் இரு, மூன்று மற்றும் கார் உள்பட சில்லரை வாகன விற்பனை 16.22 லட்ச  வாகனங்களாக உள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 5 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் 17.14 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. பண்டிகை காலம் மற்றும் திருமண காலம் காரணமாக 2022 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாகனங்கள் விற்பனை அமோக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2020 டிசம்பரில் 20.57 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

5ஜி

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ கடந்த சில தினங்களுக்கு முன் குவாலியர், ஜபைபூர், லூதியானா மற்றும் சிலிகுரி ஆகிய 4 நகரங்களில் 5ஜி சேவையை தொடங்கியது. இதுவரை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நம் நாட்டில் மொத்தம் 72 நகரங்களில் தனது ட்ரூ 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.