வர்த்தக துளிகள்... பி.எஸ்.என்.எல். 2024ல் 5ஜி சேவையை தொடங்கும்-மத்திய அமைச்சர் தகவல்

 
பி.எஸ்.என்.எல்.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் 4ஜி கட்டமைப்பை உருவாக்குவதற்காக டி.சி.எஸ். மற்றும் சி-டி.ஓ.டி. தலைமையிலான கூட்டமைப்பை இறுதி செய்துள்ளது, இது ஒப்பந்தத்தின் கீழ் ஆர்டர் செய்த ஒரு வருடத்தில் 5ஜிக்கு மேம்படுத்தப்படும். 2024ல் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவையை தொடங்கும் என தெரிவித்தார்.

தங்கம்

உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை அதிகரித்து வருகின்றன, தங்க நகைக்கான தேவை மீண்டும் வர தொடங்கியுள்ளது, பங்குச் சந்தைகளின் ஏற்ற இறக்கமாக காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தில் முதலீடு செய்ய விரும்புவது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கை மெதுவாக இருக்க வேண்டும் என்று அந்த வங்கி அதிகாரிகள் இடையே ஒரு உடன்பாடு இருப்பதாக தெரிகிறது எனவே இந்த ஆண்டில் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்த துறையை சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெய்

ரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் உற்பத்தியாகும் கச்சா எண்ணெய்யை சீனா மற்றும் இந்தியாவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்கிறது. அதுவும் அதிக தள்ளுபடி விலையில் ஏற்றுமதி செய்கிறது.  ஐரோப்பிய ஒன்றியம் தங்களது மீது விதித்த தடையை தொடர்ந்து இந்தியா மற்றும் சீனாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் இந்தியா 41 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்துள்ளது.

வால்மார்ட்

வால்மார்ட் நிறுவனம் இந்திய சந்தையில் நுழைய வேண்டும் என்பதற்காக பிளிப்கார்ட் நிறுவனத்தை கைப்பற்றியது. அதன் மூலம் போன்பே நிறுவனமும் வால்மார்ட் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இந்நிலையில் போன்பே நிறுவனத்தின் தலைமை அலுலவகத்தை  சிங்கப்பூரில் இருந்தது இந்தியாவுக்கு மாற்றியதற்காக செலுத்த வேண்டிய 100 கோடி டாலர் வரியில் பெரும் பகுதியை இந்திய அரசுக்கு செலுத்தி விட்டதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.