வர்த்தக துளிகள்... 5 நாள் வார வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 30, 31ம் தேதிகளில் வங்கி ஸ்டிரைக்?

 
வங்கி ஸ்டிரைக்

வங்கிகளில் ஐந்து நாள் வார வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் அழைப்பு விடுத்துள்ளது. திட்டமிட்டப்படி வங்கி ஸ்டிரைக் நடைபெற்றால் வரும் சனிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக வங்கிகள் இயங்காது. வங்கி பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால் வங்கி கிளைகளின் வழக்கமான பணிகள் பாதிக்கும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எதிர்பார்க்கிறது.

விவசாயி

இந்திய விவசாயிகளுக்கு அத்தியாவசியமான உரங்களை உற்பத்திய செய்வதற்கான முக்கிய கூறுகளின் ஒன்றான அம்மோனியம் பாஸ்பேட் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அம்மோனியம் பாஸ்பேட் தேவைக்கு ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவை இந்தியா நாடியுள்ளது. மொராக்கோவின் மிகப்பெரிய பாஸ்பேட் உற்பத்தி நிறுவனமான ஓ.சி.பி. குழுமம், 17 லட்சம் டன் பாஸ்பேட் அடிப்படையிலான உரத்தை இந்தியாவுக்கு விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

ஸ்டாண்டர்ட் மீடியா இன்டெக்ஸின் சமீபத்திய அறிக்கையில், எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு டிவிட்டரில் விளம்பரதாரர்கள் தங்கள் விளம்பர செலவினங்களை குறைத்துள்ளனர். கடந்த டிசம்பரில் டிவிட்டர் நிறுவனத்தில் விளம்பர செலவினம் 71 சதவீதம் குறைந்துள்ளது. இதனையடுத்து மீண்டும் விளம்பரதாரர்களை கவரும் நோக்கில், சில இலவச விளம்பரங்களை வழங்குதல், அரசியல் விளம்பரங்கள் மீதான தடை நீக்குதல் போன்ற நடவடிக்கையை டிவிட்டர் மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் பங்குச் சந்தைகளில் ஏராளமான மோசடி  வேலைகளை செய்துள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட தவறான தகவல் மற்றும் பழமையான, ஆதாரமற்ற மற்றும் மதிப்பிழந்த  குற்றச்சாட்டுக்களின் கலவையாகும்.  ஏற்கனவே அவை (குற்றச்சாட்டுக்கள்) இந்தியாவின் உயர் நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன  என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.