பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்.. சென்செக்ஸ் 37 புள்ளிகள் உயர்வு..

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. சென்செக்ஸ் 37 புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. முன்னணி நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது போன்றவை பங்கு வர்த்தகத்துக்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும் மத்திய பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவற்றால் பங்கு வர்த்தகம் நிலையில்லாமல் இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுசுகி இந்தியா உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

டாடா மோட்டார்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,530 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,973 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 147 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.280.36 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.46 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 37.08 புள்ளிகள் உயர்ந்து 60,978.75 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 0.25 புள்ளிகள்  சரிவு கண்டு 18,118.30 புள்ளிகளில் முடிவுற்றது.