வர்த்தக துளிகள்.. நாடு முழுவதும் 25 ஆயிரம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் டாடா பவர்..

 
மின்சார வாகனம் சார்ஜிங்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் வாகனங்களில் மின்சார தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொள்வதை ஆதரிப்பதற்காக நாடு முழுவதும் 25 ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் பாயிண்ட்களை அமைப்பதற்கான நாடு தழுவிய திட்டத்தை தொடங்கியுள்ளதாக டாடா பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரேட்டர் நொய்டாவில் நடந்து கொண்டிருக்கும் ஆட்டோ கண்காட்சி 2023ல், தனது ஹைடெக் எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் சிஸ்டத்தை டாடா பவர் கண்காட்சிக்கு வைத்துள்ளது.

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ஜனவரி 6ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 126  கோடி டாலர் குறைந்து 56,158 கோடி டாலராக சரிவடைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு 56,285  கோடி டாலராக இருந்தது. கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 46.10  கோடி டாலர் உயர்ந்து 4,178 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021 அக்டோபரில் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 64,500 கோடி டாலர் என்ற அளவில் இருந்தது. 

வாகனங்கள்

நம் நாட்டில் கடந்த டிசம்பர் காலாண்டில் பைக், காா், டிரக் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்கள் விற்பனை 51.59 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2021 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். அந்த காலாண்டில் மொத்தம் 46.68 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது என்று இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்)  தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

பணவீக்கம் குறைந்து வருவது, பொருளாதார வளர்ச்சி வேகம் குறைய வாய்ப்புள்ளது போன்றவை இந்திய ரிசர்வ் வங்கியை இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க தூண்டும் என்று நொமுரா ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2 மாதங்களாக (2022 நவம்பர், டிசம்பர்) சில்லரை விலை பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.