வர்த்தக துளிகள்... ஜனவரி 30,31ம் தேதிகளில் வங்கி பணியாளர்கள் ஸ்டிரைக்

 
வங்கி ஸ்டிரைக்

பல வங்கி சங்கங்களின் தலைமை அமைப்பான வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 30ம் தேதி முதல் இரண்டு நாள் வேலைநிறுத்ததத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மும்பையில நேற்று நடைபெற்ற வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்.

காக்னிசன்ட்

இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ரவிக்குமார், காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ரவிக்குமார் சுமார் 20 ஆண்டுகள் இன்போசிஸ் நிறுவனத்தின் பல்வேறு தலைமை பொறுப்புகளில் வகித்தார். காக்னிசன்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்னிசன்ட் இன்று அதன் இயக்குனர்கள் குழு ரவி குமாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும், குழுவின் உறுப்பினராகவும் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இந்த நிதியாண்டில் கடந்த சனிக்கிழமை வரையிலான காலத்தில் (2022 ஏப்ரல் 1 முதல் ஜனவரி 10 வரை)  மொத்த  நேரடி வரி வசூல் ரூ.14.71 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் சுமார் 25  சதவீதம் அதிகமாகும் என்று நேரடி வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாமாயில்

2022 டிசம்பர் மாதத்தில் நம் நாட்டின் பாமாயில் இறக்குமதி 11 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 96 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் முந்தைய நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது பாமாயில் இறக்குமதி 2.8 சதவீதம் குறைவாகும். 2022 நவம்பர் மாதத்தில் 11.4 லட்சம் டன் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது என வர்த்தக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.