வர்த்தக துளிகள்.. ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி

 
ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடர்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு அதன் பேபி பவுடர் தயாரிப்புகளை தயாரிக்க மற்றும் விநியோகம் செய்ய மும்பை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்நிறுவனத்தின் பேபி பவுடர் தயாரிப்புகளை தயாரிக்க, விற்க மற்றும் விநியோகம் செய்வதற்கான உரிமத்தை  ரத்து செய்து மகாராஷ்டிரா அரசு பிறப்பித்த இரண்டு உத்தரவுகளை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கார்கள்

ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சிக்கு இடையே சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் பிரதிநிதி இயக்குனரும், தலைவருமான தோஷிஹிரோ சுசுகி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தோஷிஹிரோ சுசுகி கூறுகையில், உலகின் நம்பர் ஒன் ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாற வாய்ப்புள்ளது. அதில் சிறிய கார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என தெரிவித்தார்.

என்.சி.எல்.

பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவின் துணை நிறுவனம் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (என்.சி.எல்.). என்.சி.எல். நிறுவனம் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்படும் எம்-சாண்ட் உற்பத்தியை விரைவில் தொடங்க உள்ளது. என்.சி.எல். நிறுவனம் மத்திய பிரதேசத்தில் அதன் அம்லோஹ்ரி திட்டத்துக்காக எம்-சாண்ட் அல்லது தயாரிக்கப்பட்ட மணல் உற்பத்தியை தொடங்கும் என நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட்

ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 85வது இடத்தில் இந்திய பாஸ்போர்ட் உள்ளது. 2022ம் ஆண்டில் இந்த பட்டியலில் இந்தியா 83வது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டு இடங்கள் பின்தங்கியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் பயன்படுத்தி 59 நாடுகளுக்கு செல்லலாம். உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் தொடர்ந்து ஜப்பான் முதல் இடத்தில் உள்ளது. அந்நாட்டவர்கள் 193 நாடுகளுக்குள் விசா இல்லாமல் நுழையலாம்.