வர்த்தக துளிகள்... உள்நாட்டு விமான போக்குவரத்து சேவையில் களம் இறங்கும் புதிய நிறுவனம் fly91

 
விமானம்

விமான நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஆனாலும் புதிய நிறுவனங்கள் விமான சேவையில் களம் இறங்கி வருகின்றன. கடந்த ஆண்டு ஆகாசா ஏர் நிறுவனம் விமான சேவையை தொடங்கியது. தற்போது ப்ளை91 (fly91) என்ற நிறுவனம் உள்நாட்டு விமான போக்குவரத்து  சேவையில் களம் இறங்க உள்ளதாக தகவல். இந்த ஆண்டு செப்டம்பருக்குள் பயணிகள் விமான சேவையை ப்ளை91 நிறுவனம்  தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் ரெயில்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது வரை 8 வந்தே பாரத் ரயில்களை மட்டுமே தொடங்கியுள்ளது. திட்டமிட்ட காலத்துக்குள் இலக்கை எட்ட வேண்டுமானால், இனி ஒவ்வொரு 3 நாட்களுக்கும் ஒரு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

5ஜி

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவையை படிப்படியாக வழங்கி வருகின்றன. 2024 மார்ச் மாதத்துக்குள் 10 முதல் 15 கோடி மொபைல் போன் பயன்படுத்துபவர்களை 5ஜிக்கு மாற்ற அந்நிறுவனங்கள் இலக்கு வைத்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை வேகமாக தொடங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நிலக்கரி

2022ம் ஆண்டில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் தெர்மல் நிலக்கரி இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்திய ஆலோசனை நிறுவனமான கோல்மிண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022ம் ஆண்டில் இந்தியா 16.11 கோடி டன் தெர்மல் நிலக்கரி இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய 2021ம் ஆண்டைக் காட்டிலும் 14.7 சதவீதம் அதிகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.