வர்த்தக துளிகள்.. ஜி.எஸ்.டி.யால் அரசுக்கு வருவாய் இழப்பு-பிபேக் டெப்ராய் தகவல்
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் பிபேக் டெப்ராய் பேட்டி ஒன்றில், சிறந்த ஜி.எஸ்.டி. என்பது ஒற்றை விகிதத்தை கொண்டதாகும், அது வருவாய் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதாகும். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது, நிதி அமைச்சகத்தின் சில கணக்கீடுகள், வருவாய் நடுநிலையாய் இருக்க சராசரி ஜி.எஸ்.டி. விகிதம் குறைந்தபட்சம் 17 சதவீதமாக இருக்க வேண்டும். இப்போது சராசரி விகிதம் 11.4 சதவீதமாக உள்ளது. எனவே ஜி.எஸ்.டி.யால் அரசாங்கம் வருவாயை இழக்கிறது என தெரிவித்தார்.
நடப்பு 2023-24ம் நிதியாண்டில் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 சதவீதமாக இருக்கும் என்று தர நிர்ணய நிறுவனமான இக்ரா கணித்துள்ளது. வேகமான பொருளாதார வளர்ச்சிக்குசேவை துறையில் ஏற்பட்ட மீட்சி முக்கிய காரணம் எனகூறப்படுகிறது. கடந்த ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது.
2023ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் (ஜனவரி-ஜூன்) இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி 2.5 சதவீதம் குறைந்து 80,090 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. கணக்கீடு காலத்தில், இந்தியாவின் சரக்குகள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 1.5 சதவீதம் உயர்ந்து 37,950 கோடி டாலராகவும், சரக்குகள் மற்றும் சேவைகள் இறக்குமதி 5.9 சதவீதம் சரிந்து ரூ.41,550 கோடி டாலராகவும் இருந்தது என்று ஜி.டி.ஆர்.ஐ. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐ.ஐ.எம். அகமதாபாத் பேராசிரியர் ஒருவர் திட்டக்குழுவுடன் இணைந்து இந்தியர்களின் டிஜி்ட்டல் மீடியா பயன்பாடு பழக்கம் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்றை நடத்தினார். அந்த ஆய்வின்படி, இந்தியாவில் மொபைல்போன் பயன்படுத்துபவர்கள் தாங்கள் விழித்திருக்கும் நேரத்தில், ஐந்தில் ஒரு பகுதியை, சமூக ஊடகங்கள், ஓ.டி.டி. இயங்குதளங்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் உள்பட தகவல் அல்லது பொழுதுபோக்கு பயன்பாடுகளில் செலவிடுகின்றனர் என்று தெரியவந்துள்ளது.