வர்த்தக துளிகள்... உலக அளவில் வேலைவாய்ப்பு 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி காணும்

 
வேலைவாய்ப்பு

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2023ம் ஆண்டில் உலகளாவிய வேலைவாய்ப்பு வெறும் 1 சதவீதம் மட்டுமே வளரும். தற்போதைய உலக பொருளாதார மந்தநிலை காரணமாக வேலைப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு இல்லாத குறைந்த தரம், மோசமான ஊதியம் பெறும் வேலைகளை ஏற்றுக் கொள்ள தொழிலாளர்களை கட்டாயப்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடு

இந்த ஆண்டில் வீடுகள் விலை அதிகரிக்கும் என தெரிகிறது. ஏனென்றால் கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்து வருவதால் வீடுகள் விலை உயரும் என டெவலப்பர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னணி நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் பங்கேற்ற டெவலப்பர்களில் 58 சதவீதம்  பேர் வீடுகள் விலை உயரும் என தெரிவித்துள்ளனர். அதேசமயம் 32 சதவீத டெவலப்பர்கள் வீடுகள் விலை நிலையாக இருக்கும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பணவீக்கம்

கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.95 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 5.85 சதவீதமாக இருந்தது. 2021 பிப்ரவரி முதல் இதுவரையிலான காலத்தில் முதல் முறையாக மொத்த விலை பணவீக்கம் கடந்த டிசம்பரில் 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கமும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி,இறக்குமதி

கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் சரக்குகள் ஏற்றுமதி 3,448 கோடி டாலராக உள்ளது. இது  2021 டிசம்பர் மாதத்தை காட்டிலும் 12 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் நம் நாட்டில் இருந்து 3,927 கோடி டாலருக்கு சரக்குகள் ஏற்றுமதியாகி இருந்தது. 2022 டிசம்பர் மாதத்தில் 5,824 கோடி டாலர் மதிப்பிலான சரக்குகள் நம் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதத்தில் 2,376 கோடி டாலருக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகமாகி உள்ளது.