வர்த்தக துளிகள்.. கவுதம் அதானிக்கு விருது

 
கவுதம் அதானி

இந்தியா-அமெரிக்கா பார்ட்னர்ஷிப்பை வலுப்படுத்த அளித்த பங்களிப்புக்காக அதானி குழுமத்தின தலைவரும், உலகின் 3வது பெரும் கோடீஸ்வருமான கவுதம் அதானிக்கு அமெரிக்க இந்திய வர்த்தக USIBC 2022 குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கி கவுரவித்தது. இந்த நிகழ்ச்சியில் கவுதம் அதானி பேசுகையில், 2050ம் ஆண்டுக்குள் அமெரிக்க மற்றும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மொத்த மதிப்பு 70 லட்சம் கோடி டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

கார்களில் ஏர்பேக்

உலகின் கொடிய சாலைகளை கொண்ட நம் நாட்டில் வாகனத்தில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் அனைத்து கார்களிலும் 6 ஏர் பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதிகளை இறுதி செய்ய மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர்  நிதின் கட்கரி எதிர்பார்ப்பதாக தகவல். டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த சில தினங்களுக்கு முன் கார் விபத்தில் பலியானதை தொடர்ந்து நிதின் கட்கரி மீண்டும்  கார்களில் 6 ஏர்பேக்குகள் இருப்பது தொடர்பான உந்துதலை ஏற்படுத்தினார்.

விவோ இந்தியா கடை

ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது பிரத்யேக கடைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் 650ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்பேர் விவோ இந்தியா நிறுவனத்துக்கு நாடு முழுவதுமாக  600க்கும் மேற்பட்ட பிரத்யேக கடைகள்  மற்றும் 20க்கும் மேற்பட்ட அனுபவ மையங்களை கொண்டுள்ளது.  விவோ இந்தியாவின் பிரத்யேக கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முடிவு அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஹோட்டல் அறை

பெங்களூருவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அந்த வீடுகளில் இருந்தவர்கள் நகரத்தில் ஹோட்டல்களில் அறைகள்  தேடி அலைகின்றனர். இதனால் பெங்களூருவில் ஹோட்டல் அறைக் கட்டணங்கள் இரு மடங்கு அதிகரித்துள்ளது.   கடந்த சில தினங்களுக்கு முன் அந்நகரில்  ஒரு இரவுக்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 இருந்த அறைவாடகை தற்போது ரூ.30,000 முதல் ரூ.40,000ஆக உயர்ந்துள்ளதாக தகவல்.