வர்த்தக துளிகள்... கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய கனரா வங்கி..

 
நஷ்டத்தை கணக்கு காட்டிய பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி…

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. கனரா வங்கி எம்சிஎல்ஆர் அடிப்படையிலான அனைத்து விதமான கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.15 சதவீதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் புதன்கிழமை (இன்று)  முதல் அமலுக்கு வருவதாக கனரா வங்கி தெரிவித்துள்ளது.

லுப்தான்சா

ஜெர்மனிய விமான போக்குவரத்து சேவை நிறுவனமான லுப்தான்சாவில், விமானிகள் சம்பள உயர்வு கோரி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். மேலும் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமையன்று விமானிகள் வெளிநடப்பு செய்தனர் இதனால் 100க்கும் அதிகமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் நிறுவனம் தீவிரமான வாய்ப்பை வழங்காவிட்டால்  புதன்கிழமை (இன்று) முதல் 2 நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுவோம் என்று விமானிகள் சங்கம் (வெரினிகுங் காக்பிட் யூனியன்) தெரிவித்துள்ளது.

நிலக்கரி

நம் நாட்டின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நிர்ணயித்த இலக்கை காட்டிலும் குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் நம் நாடு 5.83 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்துள்ளது. அந்த மாதத்தில் 6.79 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 2021 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் நிலக்கரி உற்பத்தி கடந்த மாதத்தில் 8.27 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

அமெரிக்காவை சேர்ந்த சென்ஸ்ஹாக் நிறுவனம் சூரிய மின் உற்பத்தி துறைக்கான மென்பொருள் அடிப்படையிலான மேலாண்மை கருவிகளை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தை முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையகப்படுத்தியுள்ளது. சென்ஸ்ஹாக் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை 3.20 கோடி டாலருக்கு வாங்குவதற்கான உறுதியான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையெழுத்திட்டுள்ளது.