இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

இன்று நடைபெறும் ஓபெக் கூட்டமைப்பின் கூட்டத்தில்  கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையை குறைக்க ஒபெக் நாடுகள் முடிவு எடுத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயரும் அபாயம் உள்ளது. இது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகளுக்கு பாதகமாக அமையும். அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு எதிர்பார்ப்புகளுக்கு இணையாக சிறப்பாக இருந்தது. 

கச்சா எண்ணெய்

அமெரிக்க பெடரல் வங்கி தனது அடுத்த வெளிச்சந்தை கூட்டத்தில் கடனுக்கான வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கி  வட்டி விகிதத்தை உயர்த்தினால் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் மேற்கொண்டிருந்த முதலீட்டை திரும்ப பெறுவர் இது பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது பங்குகளை பொதுமக்களுக்கு வெளியீடுகிறது. இந்த பங்கு வெளியீடு  இன்று தொடங்கி வரும் புதன்கிழமை முடிவடைகிறது.

அமெரிக்க பெடரல் வங்கி

சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, அமெரிக்க டாலர் இன்டெக்ஸ், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.