வர்த்தக துளிகள்.. அரசு நடத்தும் நிறுவனங்கள் திறமையானவை அல்ல - மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பார்கவா

 
சாமானிய மனிதனால் கார் வாங்கவும், பராமரிக்கவும் முடியாது- எச்சரிக்கும் பார்கவா

அரசாங்கம் வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அரசு நடத்தும் நிறுவனங்கள் திறமையானவை அல்ல என்பதே நிசர்சனமான உண்மை. அவர்களுக்கு உற்பத்தி திறன் இல்லை, அவை லாபம் ஈட்டுவதில்லை, அவை வளங்களை உருவாக்குவதில்லை, அவை வளரவில்லை , அவர்கள் வளர எல்லா நேரத்திலும் அரசின் ஆதரவு தேவை என்று மாருதி சுசுகி இந்தியா தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்தார்.

ஏற்றுமதி,இறக்குமதி

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 1.15 சதவீதம் அதிகரித்து 3,300  கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேவேளையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில்  இறக்குமதி37 சதவீதம் உயர்ந்து 6,168 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட்  மாதத்தில்  வர்த்தக பற்றாக்குறை 2 மடங்குக்கு மேல் உயர்ந்து 2,868 கோடி டாலராக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என தகவல்.

இந்திய பொருளாதார வளர்ச்சி

2022 மார்ச் இறுதி நிலவரப்படி, பிரிட்டனை பின்னுக்கு தள்ளி சர்வதேச அளவில் 5வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா  உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்தியா தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகத்தில் 2027ம் ஆண்டுக்குள் ஜெர்மனியையும், 2029ம் ஆண்டில்  ஜப்பானையும் பொருளாதார பலத்தில்  முந்தி விடும் என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ.)  ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நம் நாடு சுமார் ரூ.28 ஆயிரம் கோடி (351 கோடி டாலர்) மதிப்புக்கு தங்கம் இறக்குமதி செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே மாதத்தை காட்டிலும் 47.54 சதவீதம் குறைவாகும். நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்க தங்கம் இறக்குமதியும் ஒரு காரணம். இருப்பினும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளபோதிலும்,  வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.