வர்த்தக துளிகள்... கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெட்ரோல் விற்பனை அதிகரிப்பு

 
பெட்ரோல், டீசல்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நம் நாட்டில் பெட்ரோல் விற்பனை 5.8 சதவீதம் உயர்ந்து 28.1 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. மேலும் டீசல் விற்பனை 4.9 சதவீதம் சரிந்து 61.1 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. 2022 ஜூலை மாதத்தில் 26.6 லட்சம் டன் பெட்ரோலும், 64.2 லட்சம் டன் டீசலும் விற்பனையாகி இருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விமான பெட்ரோல் விற்பனை 2 மடங்குக்கு மேல் அதிகரித்து 5.41 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது என அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி

பருவமழை காலத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சத்தை போக்கும் வகையில், அனல் மின் நிலையங்களில் தற்போது கையிருப்பாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி உள்பட  சுமார் 3 கோடி டன் நிலக்கரி உள்ளது என்று கோல் இந்தியா நிறுவனம்  தெரிவித்துள்ளது. மேலும், கோல் இந்தியா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் அனல் மின் நிலையங்களுக்கு 24.33 கோடி டன் நிலக்கரி சப்ளை செய்துள்ளது.

சமையல் எண்ணெய்

மத்திய நிதியமைச்சகம் சமையல் எண்ணெய்  மீதான சலுகை இறக்குமதி வரியை 2023 மார்ச் வரை மேலும் 6 மாதங்களுக்கு நீடித்துள்ளது. உள்நாட்டு சப்ளையை அதிகரிக்கும் மற்றும் விலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய நிதியமைச்சகம்  மேற்கொண்டுள்ளது. மறைமுக வரிகள் மற்றும் சுங்க மத்திய வாரியத்தின் அறிவிக்கையில், கச்சா பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் மீதான தற்போதை வரி அமைப்பில் 2023 மார்ச் 31ம் தேதி வரை மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்னிய செலாவணி

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 300 கோடி டாலர் குறைந்து 56,104 கோடி டாலராக குறைந்துள்ளது என இந்திய ரிசர்ச் வங்கி தெரிவித்துள்ளது. இதில், கையிருப்பில் உள்ள  தங்கத்தின் மதிப்பு 3,964 கோடி டாலராக உள்ளது. கடந்த ஏப்ரல் முதல் கடந்த வாரம் வரை நம் நாடு 4,500 கோடி டாலர் அன்னிய செலாவணியை இழந்துள்ளது. அதேசமயம் தற்சமயம் அன்னிய செலாவணி சரிவின் வேகம் குறைந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.