5 தினங்களில் பங்கு சந்தையில் ரூ.3 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 742 புள்ளிகள் சரிவு..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 742 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி உயர்வு நடவடிக்கை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு நிலவரம், இந்திய ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு சரிவு மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வாரம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களை தவிர்த்து மற்ற 3  தினங்களிலும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.

அமெரிக்க பெடரல் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.276.64 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 16) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.279.68  லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.04 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 741.87 புள்ளிகள் குறைந்து 58,098.92 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 203.50 புள்ளிகள் சரிவு கண்டு 17,327.35 புள்ளிகளில் முடிவுற்றது.