இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

அமெரிக்க  பெடரல் வங்கியின் கூட்டம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

அமெரிக்க பெடரல் வங்கியின் 2 நாள் கூட்டம் இந்த வாரம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு முடிவுகள் வரும் 21ம் தேதியன்று வெளியாகிறது. அமெரிக்க வெளி சந்தை கமிட்டி வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் 2002ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் 110 மார்க்கை தாண்டி உயர்ந்துள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 3 வர்த்தக தினங்களும் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டாளர்களும் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.

அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகித உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து வருவதற்கு மத்தியில், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மெற்கொண்டிருந்த முதலீட்டை திரும்ப பெற்றனர். இதே நிலை நீடித்தால் பங்குச் சந்தைகளில் சரிவு  ஏற்படும் அபாயம் உள்ளது. செப்டம்பர் 9ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட், வழங்கிய கடன் குறித்து புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அன்றைய தினமே கடந்த 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு குறித்து புள்ளிவிவரமும் வெளிவருகிறது.

கச்சா எண்ணெய்

சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.