வர்த்தக துளிகள்.. உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய கவுதம் அதானி..

 
கவுதம் அதானியின் அதானி கேஸ் லாபம் ரூ.121 கோடி… 3 மாசத்துல லாபம் 60 சதவீதம் கிடுகிடு உயர்வு…

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 15,570 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதனையடுத்து அமேசானின் ஜெப் பியோஸை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரும் பணக்காரராக உயர்ந்துள்ளார். இந்த ஆண்டில் இதுவரை மட்டும் அதானி சொத்து மதிப்பு 7,250 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இது உலக பணக்காரர்கள் பட்டியலில் உள்ள ஜெப் பியோஸ் உள்பட மற்ற 9 பேரும் இந்த ஆண்டில் இதுவரை ஈட்டிய மொத்த வருமானத்துக்கு சமமாகும்.

இரு சக்கர வாகனம்

நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப்,  மின்சார வாகனங்கள் துறையில் களம் இறங்குகிறது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் அக்டோபர் 7ம் தேதி தனது விதா பிராண்டின் கீழ் தனது முதல் மாடல் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது.  இந்நிறுவனம் ஏற்கனவே தனது காலாண்டு நிதி நிலை அறிக்கையில் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளதை உறுதி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இலக்கை எட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தற்போது பதஞ்சலி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ளது. மேலும் பதஞ்சலி நிறுவனம் அடுத்த 5 ஆண்டுகளுக்குள், பதஞ்சலி ஆயுர்வேத், பதஞ்சலி மெடிசின்,பதஞ்சலி வெல்னெஸ் மற்றும் பதஞ்சலி லைஸ் ஸ்டைல் ஆகிய 4 நிறுவனங்களையும் பங்குச் சந்தையில் பட்டியலிட உள்ளது.

வரி

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்  மீதான சந்தை ஆதாய வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும், டீசல் மற்றும் விமான பெட்ரோல் ஏற்றுமதி மீதுான வரியையும் குறைத்துள்ளது.  இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிலிருந்து குறைந்த விலைக்கு எண்ணெய் வாங்கி, அதை இங்கு சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஏற்றுமதி செய்து நல்ல லாபம் ஈட்டின. அதேசமயம் உள்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனையடுத்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கு மத்திய அரசு வரி விதித்தது.