வர்த்தக துளிகள்.. லேப்டாப் விலை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.40 ஆயிரமாக குறையும்- அனில் அகர்வால்

 
அனில் அகர்வால்

வேதாந்தா குழுமம் பாக்ஸ்கானுடன் இணைந்து குஜராத்தில் செமிகண்டக்டர் சிப் மற்றும் மின்னணு சாதனங்களுக்கான திரை தயாரிப்பு ஆலையை தொடங்க உள்ளது. இந்நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிப்கள் மற்றும் கிளாஸ் (திரை) கிடைத்தவுடன், ஒரு மடிக்கணினியின் விலை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.40 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவாக குறையும் என வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்தார்.

பி.எம்.டபுள்யூ. கார்

பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடந்த சில தினங்களுக்கு முன், ஜெர்மனை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. நிறுவனம் மாநிலத்தில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலையை தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால் இதனை அந்நிறுவனம் மறுத்துள்ளது. பஞ்சாபில் கூடுதல் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்கும் திட்டம் இல்லை என்று பி.எம்.டபுள்யூ. நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, Benchmark Prime Lending Rate (BPLR) அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதத்தை 0.70 சதவீதம் உயர்த்தி 13.45 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் செப்டம்பர் 15 (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது.  முன்னதாக, பிபிஎல்ஆர் வட்டி விகிதம் 12.75  சதவீதமாக இருந்தது.

சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் நிகழ்ச்சல் கலந்து கொண்ட மத்திய வருவாய் துறை செயலாளர் தருண் பஜாஜ் பேசுகையில், கடந்த சில மாதங்களாக மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூலில் ரூ.1.50 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டுவதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறோம். வரும் அக்டோபர் மாதம் முதல் வழக்கமான மாதாந்திர ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.50 லட்சம் கோடி என்ற அளவில் இருக்கும் என தெரிவித்தார்.