வர்த்தக துளிகள்... மருத்துவமனையை வாங்க போட்டி போடும் நிறுவனங்கள்

 
 கேர் ஹாஸ்பிட்டல்ஸ்

எவர்கேர் நிறுவனத்தின் கேர் ஹாஸ்பிட்டல்ஸ் நம் நாட்டில் இரண்டாவது பெரிய சங்கிலித்தொடர் மருத்துவமனையாகும். இந்நிறுவனத்தை வாங்குவதற்கு பிளாக்ஸ்டோன், சிவிசி கேபிடல்,டெமாசெக் மற்றும் மேக்ஸ் ஹெல்த்கேர் உள்ளிட்ட சில திட்ட மற்றும் தனியார் பங்கு முதலீட்டாளர்கள்  போட்டியிடுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. நம் நாட்டில் மொத்தம் 15 கேர் ஹாஸ்பிட்டல்ஸ் உள்ளது.

சாலை அமைக்கும் பணி

நம் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை போடும் பணியின் வேகம் தற்போது குறைந்துள்ளது. இந்த நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான கடந்த 5 மாதங்களில் நாட்டில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் வேகம் நாள் ஒன்றுக்கு 19 கி.மீட்டராக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2020-21ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின் வேகம் நாள் ஒன்றுக்கு 37 கி.மீட்டர் என்ற சாதனை அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2021-22ம் நிதியாண்டில் இது 28.64 கி.மீட்டராக குறைந்தது.

கார்கள்

வாடிக்கையாளர்களை பாதுகாத்தல் மற்றும் வாகனங்களின் மறுவிற்பனையை ஒழங்குபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, பயன்படுத்திய வாகனங்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்கள் விற்பனை செயல்முறை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் அரசு பரிந்துரைத்துள்ளது. அரசின் முன்மொழியப்பட்ட விதிமுறைகளின்படி, ஆன்லைன், ஆப்லைன் இடைத்தரகர்கள் மாநில போக்குவரத்து துறைகளில் பதிவு செய்ய வேண்டும் என தகவல்.

பணவீக்கம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 12.41 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 3 மாதமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொடர்ந்து 17வது மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் தொடர்ந்து இரட்டை இலக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.