வர்த்தக துளிகள்... ஒரு நபர் ஒரு காரை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்- நிதின் கட்கரி

 
நிதின் கட்கரி

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பல இடங்களில் சாலையின் அகலத்தை அதிகரிக்க முடியாது. அதனால்தான் பெங்களூரு போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்கல்கள் உள்ளன. சாலையில் ஒரு நபர் ஒரு காரை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். அவர்கள் பேருந்துகள் போன்ற வெகுஜன விரைவான போக்குவரத்தை பயன்படுத்த  வேண்டும் என தெரிவித்தார்.

அமேசான்

அமேசான் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை பிரிவான அமேசான் ஹோல்சேல் நிறுவனம் 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.4,592 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். இருப்பினும் கடந்த நிதியாண்டில் அமேசான் ஹோல்சேல் நிறுவனத்தின் நிகர நஷ்டம் 3 மடங்கு உயர்ந்து ரூ.480 கோடியாக உயர்ந்துள்ளது.

பாமாயில்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நம் நாடு 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு 9.94 லட்சம்  டன் பாமாயில் இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஜூலை மாதத்தை காட்டிலும் 87 சதவீதம் அதிகமாகும். சர்வதேச சந்தையில் பாமாயில் விலை குறைவாக இருந்ததால் பாமாயில் சுத்திகரிப்பாளர்கள் அதிகளவில் இறக்குமதி செய்ததே இதற்கு காரணம். கடந்த ஜூலை மாதத்தில் 5.30 லட்சம்  டன் பாமாயில் இறக்குமதியாகி இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி

கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த சில்லரை விலை பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் உயர்ந்தது. அந்த மாதத்தில்  சில்லரை விலை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்துக்கான கட்டுப்பாட்டு அளவை காட்டிலும் அதிகம். எனவே ரிசர்வ் வங்கி எதிர்வரும் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.