வர்த்தக துளிகள்.. அடுத்த 2 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை திறக்க ஐ.டி.சி. ஹோட்டல்ஸ் திட்டம்

 
ஐ.டி.சி. ஹோட்டல்ஸ்

சிகரெட் முதல் ஹோட்டல் என பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி. நிறுவனம் தனது ஹோட்டல் வணிகத்தை பிரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகள் மற்றும் மாற்று கட்டமைப்புகளை பற்றி விவாதித்து வருகிறது. மேலும்,  ஐ.டி.சி. ஹோட்டல்ஸ் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட ஹோட்டல்களை தொடங்க திட்டமிட்டுள்ளது என்று ஐ.டி.சி. ஹோட்டல்ஸ் பிரிவு தலைமை நிர்வாகி அனில் சாதா தெரிவித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்கும் நோக்கில், ஸ்பாட் சந்தையில் 1,300 கோடி அமெரிக்க டாலர்களை விற்பனை செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருவதை மேற்கோள் காட்டி  உயர்மட்ட டீலர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

அரிசி

இந்திய துறைமுகங்களில் அரிசி ஏற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த விலைக்கு மேல் மத்திய அரசின் புதிய 20 சதவீத ஏற்றுமதி வரியை வாங்குபவர்கள் செலுத்த மறுப்பதால் கிட்டத்தட்ட 10 லட்சம் டன் அரிசி துறைமுகங்களில்  தேங்கி கிடக்கிறது என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு அண்மையில் குருணை அரிசி ஏற்றுமதி செய்ய தடை விதித்தது மற்றும் பிற ரக அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.

சச்சின் பன்சால்

நிதிச் சேவை குழுமமான நவி டெக்னாலஜியின் நிறுவனர் சச்சின் பன்சால், ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கி தொடங்குவதற்கான உரிமைத்தை எதிர்பார்த்தார். ஆனால் கடந்த மே மற்ற விண்ணப்பதாரர்களின் வங்கி உரிம விண்ணப்பத்துடன் நவியின் வங்கி உரிம விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்தது. இந்நிலையில், நாட்டுக்கு மேம்பட்ட பொருளாதாரத்தை உருவாக்க இன்னும் நவீன வங்கிகள் தேவை என்று சச்சின் பன்சால் தெரிவித்தார்.