வர்த்தக துளிகள்... மலை போல் உயரும் அதானி குழுமத்தின் கடன்

 
கவுதம் அதானியின் அதானி கேஸ் லாபம் ரூ.121 கோடி… 3 மாசத்துல லாபம் 60 சதவீதம் கிடுகிடு உயர்வு…

உலகின் 3வது பெரும் பணக்காரராக கவுதம் அதானி உருவெடுத்துள்ளார். அதேசமயம் கவுதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் கடன் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2022 மார்ச் நிலவரப்படி அதனாி குழுமத்தின் கடன் ரூ.2.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் ஹோ்கிம் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தை அதானி குழுமம் கையகப்படுத்தும் நடவடிக்கையால் அதானி குழுமத்தின் கடன் மேலும் ரூ.40 ஆயிரம் கோடி அதிகரித்து ரூ2.60 லட்சம் கோடியாக உயரும். 5 ஆண்டுகளுக்கு முன் அதானி குழுமத்தின் கடன் ரூ.1 லட்சம் கோடியாக இருந்தது என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

வாகனங்கள்

வாகன டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நம் நாட்டில் பைக், ஸ்கூட்டர், கார், வர்த்தக வாகனங்கள் உள்பட மொத்தம் 15.21 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி உள்ளது. இது 2021 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 8.3 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் நம் நாட்டில் மொத்தம் 14.04 லட்சம் வாகனங்கள் விற்பனையாகி இருந்தது. டிராக்டரை தவிர்த்து மற்ற அனைத்து வாகனங்களின் விற்பனையும் கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி

ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காததற்காக இண்டஸ்ட்ரீயல் பேங்க் ஆப் கொரியா, வூரி பேங்க் மற்றும் இந்தியாபுல்ஸ் கமர்ஷியல் கிரெடிட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முறையே ரூ.36 லட்சம், ரூ.59.10 லட்சம் மற்றும் ரூ.12.35 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதில், கே.ஒய்.சி. விதிமுறைகளுக்கு இணங்காததால் இண்டஸ்ட்ரியல் பேங்க் ஆப் கொரியாவுக்கும், வேறு விதிமுறைகள் காரணமாக மற்ற 2 நிறுவனங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

நேரடி வரி வசூல்

தனி மனிதர்களோ அல்லது நிறுவனங்களோ அரசுக்கு நேரடியாக செலுத்துகின்ற பெருநிறுவன வருமான வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி போன்றவை நேரடி வரிகள் ஆகும். இந்த நிதியாண்டில் கடந்த வியாழக்கிழமை வரையிலான காலத்தில் (ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 8 வரை)  மொத்த   நேரடி வரி வசூல் ரூ.6.48 லட்சம் கோடியாக உள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் 35.46 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.