இந்த வாரம் பங்குச் சந்தைகளில் காளையின் ராஜ்ஜியம்.. சென்செக்ஸ் 653 புள்ளிகள் அதிகரிப்பு

 
சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 653 புள்ளிகள் உயர்ந்தது.

 இந்த வாரம் தீபாவளி லெட்சுமி பூஜை, தீபாவளி பாலிபிரதிபடா ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு கடந்த திங்கள் மற்றும் புதன்கிழமை இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. அதேசமயம் கடந்த திங்கட்கிழமையன்று 1 மணி நேர  முகூர்த்த வணிகம் நடைபெற்றது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச நாடுகளின் மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்த்தும் நடவடிக்கைகள் குறித்த எதிர்ப்பார்ப்பு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.276.89 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 21) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.274.40   லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.49 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 652.70 புள்ளிகள் உயர்ந்து 59,959.85 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 210.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,786.80 புள்ளிகளில் முடிவுற்றது.