இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

பணவீக்கம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்  என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

வோடாபோன் ஐடியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பந்தன் பேங்க், பேங்க் ஆப் பரோடா, குஜராத் கேஸ், பி.வி.ஆர்., அப்பல்லோ டயர்ஸ், எஸ்கார்ட்ஸ், மகாநகர் கேஸ் மற்றும் சி.எம்.எஸ். இன்போ சிஸ்டம்ஸ் உள்பட சுமார் 300க்கு மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. கடந்த மார்ச் மாதத்தின் நிதி பற்றாக்குறை குறித்த புள்ளிவிவரம் இன்று வெளியாகிறது. கடந்த ஏப்ரல் மாத சில்லரை விலை பணவீக்கம் மற்றும் கடந்த மார்ச் மாத தொழில் துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்கள் வரும் வியாழக்கிழமை வெளியாகிறது.

வோடாபோன் ஐடியா

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு 11வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போர் பங்குச் சந்தை மற்றும் கமாட்டி சந்தையில் அதிக ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். டெல்லிவரி,  ப்ரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ்  மற்றும் வீனஸ் பைப்ஸ் அண்ட் டியூப்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் இந்த வாரம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்குகின்றன. கேம்பஸ் ஆக்டிவேர் மற்றும் ரெயின்போ சில்ட்ரஸின் மெடிகேர் ஆகிய நிறுவன பங்குகள் இந்த வாரம் பங்குச் சந்தையில் வர்த்தகத்தை தொடங்குகின்றன. எல்.ஐ.சி.யின் புதிய பங்கு வெளியீடு இன்றுடன் நிறைவடைகிறது.

கச்சா எண்ணெய்

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள்,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.