வர்த்தக துளிகள்.. ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் மத்திய அரசு ஆச்சரியப்படவில்லை-நிர்மலா சீதாராமன்

 
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியதில் மத்திய அரசு ஆச்சரியப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு முதலீட்டை பாதிக்கும் என்று பார்க்க முடியாது என தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் உயர்த்தியது. 

டிராய்

2021 டிசம்பர் காலாண்டில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ.69,695 கோடியாக உள்ளது. இது 2020 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 2.64 சதவீதம் குறைவாகும். அந்த காலாண்டில் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாய் ரூ.71,588 கோடியாக இருந்தது என தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் தெரிவித்துள்ளது.

எச்.டி.எப்.சி.

சொத்து அடமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி. நிறுவனம் தனது அடிப்படை கடன் வட்டி விகிதத்தை 0.30 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய வட்டி விகிதம் மே 9ம் தேதி (இன்று) முதல் அமலுக்கு வருவதாக எச்.டி.எப்.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. வட்டி விகிதம் உயர்வால் எச்.டி.எப்.சி. நிறுவனத்தின் தற்போதுள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டி செலவினம் அதிகரிக்கும்.

வாங்குன காரை நிறுத்த பார்க்கிங் இல்லாததே வாகன விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் – நிதின் கட்கரி 

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நம் நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரிக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில், தற்போது சுமார் 250 ஸ்டார்ட்அப்கள் செயல்படுகின்றன. அவை உண்மையில் நல்ல ஸ்கூட்டர்களை உருவாக்கியுள்ளன. மேலும் அவை அனைத்தும் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.