வர்த்தக துளிகள்.. முதல் முறையாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு இப்போது வீடு வாங்க சரியான நேரம்

 
​பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சிமெண்ட், ஸ்டீல் போன்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இருப்பினும் வீடுகளின் விலை தற்போது நியாயமான அளவில் உள்ளது. ஆகையால் வீடுகள் விலை மேலும் உயர்வதற்கு முன்பாக, முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு இது வீடு வாங்குவதற்கான சரியான நேரம், அதேசமயம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு இது சரியான நேரம் இல்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மருந்து

கடந்த 2021-22ம் நிதியாண்டில் நம் நாட்டின் மருந்து ஏற்றுமதி ரூ.1.83 லட்சம் கோடியை தொட்டுள்ளது. 2013-14ம் நிதியாண்டில் நம் நாட்டு மருந்து நிறுவனங்கள் ரூ.90,415 கோடிக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்து இருந்தன. ஆக கடந்த 8 ஆண்டுகளில் நம் நாட்டின் மருந்து ஏற்றுமதி 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் சர்வதேச வர்த்தக இடையூறுகள் மற்றும் கோவிட் தொடர்பான மருந்துகளுக்கான தேவை குறைந்தது போன்ற பாதகமான சூழ்நிலைகளில் நிலவியபோதிலும், ஏற்றுமதி நேர்மறையான வளர்ச்சியை அடைந்தது என மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட்டி விகிதம் உயர்வு

ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்.டி.எப்.சி.) நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான சில்லரை முதன்மை கடன் விகிதத்தை (ஆர்.பி.எல்.ஆர்.) 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதனால் அந்நிறுவனத்திடம் இருந்து வீட்டுக் கடன் வாங்கியவர்கள், தங்கள் வீட்டுக் கடனுக்காக அதிகமாக செலுத்த வேண்டியது இருக்கும். உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் மற்றும் புதிய கடன் வாங்குபவர்கள் புதிய வட்டி விகித அதிகரிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள் என எச்.டி.எப்.சி. அறிக்கை வெளியிட்டுள்ளது.

விமான எரிபொருள்

விமான நிறுவனங்களின் செலவினத்தில் 40 சதவீதம் எரிபொருளுக்காக செல்கிறது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் விமான எரிபொருள் விலை (கிலோ லிட்டருக்கு) 3.22 சதவீதம் உயர்த்தப்பட்டு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக, விமான நிறுவனங்கள் செலவினத்தை ஈடுசெய்ய விமான பயண கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.