இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

அமெரிக்க பெடரல் வங்கி கூட்டம், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்  என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், அதானி என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கோடக் மகிந்திரா வங்கி, டோட்டல் கியாஸ், மாரிக்கோ, டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, தாபர் மற்றும் டாபர் இந்தியா பல முன்னணி நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. எல்.ஐ.சி.யின் புதிய பங்கு வெளியீடு வரும் 4ம் தேதி தொடங்குகிறது. இந்த புதிய பங்கு வெளியீடு வாயிலாக ரூ.20,557 கோடி மதிப்பிலான பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய உள்ளது.

லாக்டவுன் பார்த்த பார்வை….தாபர் இந்தியா லாபம் ரூ.319 கோடியாக குறைந்தது… டிவிடெண்டுக்கு பரிந்துரை

அமெரிக்காவில் அந்நாட்டு ரிசர்வ் வங்கியான அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் இந்த வாரம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது கடந்த ஏப்ரல் மாத வாகன விற்பனை குறித்த புள்ளிவிவரங்களை நேற்று முதல் வெளியிட தொடங்கி உள்ளன. இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் போன்றவை பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கச்சா எண்ணெய்

அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த முக்கிய புள்ளிவிவரங்களை இந்த வாரம் வெளியிடுகின்றன. இதுதவிர சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்கள்,  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு  உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்ற இறக்கத்தை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.