வர்த்தக துளிகள்.. 2023 ஏப்ரல் மாதத்துக்குள் எங்க நிறுவனத்துக்கு கடனை இருக்காது..

 
 இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட்

ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறையை சேர்ந்த சங்கலி தொடர் நிறுவனம் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான புனித் சத்வால், 2023 ஏப்ரல் மாதத்துக்குள் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக இருக்கும் என தெரிவித்துள்ளார். 2021-22ம் நிதியாண்டில் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் இழப்பு ரூ.265 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய நிதியாண்டில் ரூ.796 கோடியாக இருந்தது.

மகிந்திரா மின்சார வாகனம்

மகிந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி, கடந்த 2021-22ம் நிதியாண்டில் மொத்தம் 16,862 மூன்று சக்கர மின்சார  வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2020-21ம் நிதியாண்டைக் காட்டிலும் 3 மடங்குக்கும் அதிகமாகும். அந்த நிதியாண்டில் மொத்தம் 5,376 மூன்று சக்கர மின்சார வாகனங்களை மகிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம் விற்பனை செய்து இருந்தது.

ஹர்தீப் சிங் பூரி

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களான டெல்லி, மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவில் விமான எரிபொருள் மீதனா வரி மற்றும் வாட் அதிகமாக இருப்பதுதான் விமான டிக்கெட் விலை அதிகரிக்க வழிவகுத்தது என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குற்றம் சாட்டினார். அந்த மாநில அரசுகள் விமான எரிபொருள் மீது 25 சதவீதம் வரி மற்றும் வாட் விதிக்கின்றன. மத்திய அரசின் நிர்வாகத்தில் இருக்கும் ஜம்மு அண்ட் காஷ்மீரில் வாட் 1 சதவீதம் மட்டுமே விதிக்கப்படுகிறது என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

டிவிடெண்ட்

கொரோனா பாதிப்புகள் குறைந்த பிறகு பொருளாதார நடவடிக்கைகளில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதால் கடந்த 2021-22ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் லாபத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த நிதியாண்டில் மதிப்பிட்டதைக் காட்டிலுல் மத்திய அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலான டிவிடெண்ட் வருவாய் அதிகம் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து டிவிடெண்டாக ரூ.59,100 கோடி கிடைத்துள்ளது. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அதிகமாகும்.