கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் கரடியின் ஆதிக்கம்.. 5 தினங்களில் சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி..

 
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,145 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த வாரம் திங்கள் முதல் புதன் வரையிலான 3 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. கடந்த வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அமெரிக்காவில் சிலிக்கான் வேலி பேங்க் மற்றும் சிக்னேச்சர் பேங்க் ஆகிய வங்கிகள் திவாலானது சர்வதே அளவில் பங்குச் சந்தைகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இந்திய பங்குச் சந்தைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை  செய்தது போன்றவையும் பங்கு வர்த்தகத்தின் சரிவுக்கு அடிகோலியது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் மற்றும் மொத்த விலை பணவீக்கம் குறித்த புள்ளிவிவரங்கள் பங்குச் சந்தைகளில்  தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

சிக்னேச்சர் பேங்க்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.257.71  லட்சம் கோடியாக இருந்தது. முந்தைய வார வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 10) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.262.60 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.89 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி
 
நம் நாட்டு பங்குச் சந்தைகளில், கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,145.23 புள்ளிகள் குறைந்து 57,989.90 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 312.85 புள்ளிகள் சரிவு கண்டு 17,100.05 புள்ளிகளில் முடிவுற்றது.