ஜூலையில் வாகன விற்பனை சூப்பர்... டி.வி.எஸ்., மாருதி, அசோக் லேலண்ட் ஹேப்பி..

 
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி

கடந்த ஜூலை மாதத்தில் டி.வி.எஸ்., மாருதி மற்றும் அசோக்  லேலண்ட் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி கடந்த ஜூலை மாதத்தில் 3,14,639 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி 2,78,855 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது. ஆக, கடந்த ஜூலை மாதத்தில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் வாகன விற்பனை 13 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

மாருதி சுசுகி கார் மாடல்கள்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 8.28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் மொத்தம் 1,75,916 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் 2021 ஜூலை மாதத்தில் மொத்தம் 1,62,462 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

அசோக் லேலண்ட்

கடந்த ஜூலை மாதத்தில் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 125 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2022 ஜூலை மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 14,351 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் அசோக் லேலண்ட் நிறுவனம் மொத்தம் 6,448 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.