மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை ஏறுமுகம்.. பஜாஜ் வாகன விற்பனை இறங்குமுகம்

 
டாடா மோட்டார்ஸ்

கடந்த ஜூலை மாதத்தில் மகிந்திரா, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை குறைந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 51.12 சதவீதம் அதிகரித்துள்ளது.  டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2022 ஜூலை மாதத்தில் மொத்தம் 81,790 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மொத்தம் 54,119 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

மகிந்திரா அண்ட் மகிந்திரா

மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் பயணிகள் வாகனங்கள் விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் உள்நாட்டில் 33 சதவீதம் உயர்ந்துள்ளது. 2022 ஜூலை மாதத்தில் மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் உள்நாட்டில் 28,053 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் 2021 ஜூலை மாதத்தில் உள்நாட்டில் 21,046 பயணிகள் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

பஜாஜ் ஆட்டோ

நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ்  நிறுவனத்தின் மொத்த வாகன (இரு சக்கரம் மற்றும் வர்த்தக வாகனம்) விற்பனை கடந்த ஜூலை மாதத்தில்  4 சதவீதம் வீழ்ச்சி கண்டு 3,54,670 வாகனங்களாக குறைந்துள்ளது. இதில், இரு சக்கர வாகன விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 5 சதவீதம் குறைந்து 3,15,054 வாகனங்களாக சரிவடைந்துள்ளது. அதேசமயம் பஜாஜ்  ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தக வாகன விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 39,616 வாகனங்களாக உயர்ந்துள்ளது. 2021 ஜூலை மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம்  3,30,569 இரு சக்கர வாகனங்களையும், 38,547 வர்த்தக வாகனங்களையும் விற்பனை செய்து இருந்தது.