வர்த்தக துளிகள்.. இந்தியாவில் கடத்தல் தங்கம் வரத்து அதிகரிக்கும்- உலக தங்க கவுன்சில்

 
தங்கம்

2022ம் ஆண்டில் இந்தியாவுக்குள் கடத்தல் தங்கத்தின் வரத்து அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. இது தொடர்பாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தங்கம் இறக்குமதி மீதான வரியை 7.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியது. இதனால் இந்த ஆண்டில் கடத்தப்பட்ட தங்கத்தின் வரத்து 33 சதவீதம் அதிகரித்து 160 டன்னாக இருக்கும். கோவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த ஆண்டில் கடத்தப்பட்ட தங்கத்தின் நுழைவு அதிகமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கிருஷ்ணகிரியில் உள்ள தனது ஆலையில் மின்சார ஸ்கூட்டர்களின் உற்பத்தியை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைத்துள்ளதா தகவல். ஆண்டு பராமரிப்பு மற்றும் புதிய எந்திரங்களை நிறுவுவதற்காக ஆலை மூடப்பட்டதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சொல்கிறது. ஆனால் சரக்கு (ஸ்கூட்டர் கையிருப்பு அதிகமாக உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கிருஷ்ணகிரியில் உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி மும்முரமாக தொடங்கி 8 மாதங்கள்தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் வழங்கிய கடன்

இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்த 15 தினங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 12.89 சதவீதம் உயர்ந்து ரூ.122.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வங்கிகள் திரட்டிய டெபாசிட் 8.35 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.168.09 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜூலை 1ம் தேதியுடன் முந்தைய 15 தினங்களில் வங்கிகள் வழங்கிய கடன் 13.29 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 9.77 சதவீதமும் வளர்ச்சி கண்டு இருந்தது. 

இறக்குமதி

நாடாளுமன்றத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த சீன சரக்குகள் இறக்குமதி சுமார் 29 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017-18ம் நிதியாண்டில் சீனாவிலிருந்து மொத்தம் 8,9714 கோடி டாலர் மதிப்புக்கு சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த 2021-22ம் நிதியாண்டில் 11,542 கோடி டாலருக்கு மதிப்பு சீன பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.