வர்த்தக துளிகள்.. இந்தியாவின் பணக்கார பெண்மணி ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா

 
ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா

இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவர் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ரா முதல் இடத்தில் உள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் ரோஷ்ணி நாடார் மல்ஹோத்ராவின் நிகர சொத்து மதிப்பு 54 சதவீதம் உயர்ந்து ரூ.84,330 கோடியாக அதிகரித்துள்ளது. நைக்கா பிராண்ட் நிறுவனத்தின் பால்குனி நாயர், பயோகானின் கிரண் மஜூம்தார் ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர் என கோடக் தனியார் வங்கி-ஹூருன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.விஜயகுமார்
எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சி.விஜயகுமார்  அதிகம் ஊதியம் பெறும் இந்திய ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரி என்று பெருமையை பெற்றுள்ளார். அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையின்படி, சி.விஜயகுமாரின் ஊதியம் ரூ.130 கோடியை எட்டியுள்ளது.  அதிக ஊதியம் பெறும் இந்திய ஐ.டி. நிறுவன தலைமை செயல் அதிகாரி பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தியரி டெலாபோர்ட் ரூ.79.80 கோடி ஊதியத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். 3வது இடத்தில்  இன்போசிஸ் நிறுவனத்தின் சலில் பரேக் உள்ளார்இ. அவரது கடந்த நிதியாண்டு  ஊதியம் ரூ.71 கோடியாக உள்ளது.

கச்சா எண்ணெய்

நம் நாடு கடந்த ஏப்ரல் முதல் மே மாதத்தில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி எண்ணெய் இறக்குமதி செய்வது 4.7 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்தில் இந்தியா நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேரல்களுக்கும் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாக ரஷ்ய மத்திய வங்கி தெரிவித்துள்ளது. தள்ளுபடி விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய்யை வழங்குவதால் நம் நாடு அதிகளவில் அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

டிராய்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022 மார்ச் காலாண்டில்  தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 6.77 சதவீதம் உயர்ந்து ரூ.58,886 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய டிசம்பர் காலாண்டில் ரூ.55,151 கோடியாக இருந்தது. 2021 நவம்பரில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியதே இதற்கு காரணம்.