வர்த்தக துளிகள்.. கடந்த நிதியாண்டில் 78 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை

 
பெட்ரோல், டீசல்

கடந்த 2021-22ம் நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 78 மற்றும் 76 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையை 7 மற்றும் 10 முறை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே 280 மற்றும் 279 நாட்களுக்கு மாறாமல் இருந்தது என ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா தெரிவித்தார்.

வருமான வரி கணக்கு தாக்கல்

20221-22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை இம்மாதம் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடுவை தாண்டினால் அபராதத்துடன் வருமான வரி கணக்கை  தாக்கல் செய்ய வேண்டியது இருக்கும். இதனால் வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை விரைந்து தாக்கல் செய்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், டிவிட்டரில் சிலர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவற்கான கடைசி தேதி ஜூலை 31ம் தேதி சாத்தியமில்லை என்றும், அதை நிரந்திரமாக ஆகஸ்ட் 31ம் தேதியாக மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

பணவீக்கம் அதிகமாக இருப்பதால் ஆசிய நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் வட்டி விகிதத்தை தீவிரமாக உயர்த்தி வருவதால், ஒரு சில ஆசிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது என பொருளாதார நிபுணர்களின் சமீபத்திய புளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஆசிய நாடுகளில் அதிகபட்சமாக இலங்கை அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலையை சந்திக்க 85 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

கேம்ப்பெல் வில்சன்

டாடா சன்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிய தலைமை செயல் அதிகாரியாக கேம்ப்பெல் வில்சன் என்பவரை நியமனம் செய்தது. இந்நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கேம்ப்பெல் வில்சனுக்கு பாதுகாப்பு ஒப்புதலை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அவர் பொறுப்பேற்க அனுமதிக்கும் ஒரு நடவடிக்கையாகும். அதேசமயம் இது தொடர்பாக ஏர் இந்தியாவோ அல்லது மத்திய உள்துறை அமைச்சகமோ எந்தவித கருத்தையும் உடனடியாக தெரிவிக்கவில்லை.