இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை எவை தாக்கத்தை ஏற்படுத்தும்.. பங்குச் சந்தை நிபுணர்கள் கணிப்பு..

 
பங்கு வர்த்தகம்

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். 

பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, எல் அண்ட் டி, நெஸ்லே இந்தியா, ஸ்ரீ சிமெண்ட், சிப்லா, எச்.டி.எப்.சி. மற்றும் சன்பார்மா உள்பட சுமார் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட உள்ளன. அமெரிக்க பெடரல் வங்கியின் வெளிச்சந்தை கூட்டம் 26-27 ஆகிய 2 தினங்களில் நடைபெற உள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏசியன் பெயிண்ட்ஸ்

பல மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை காட்டிலும் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த வாரம் முதல் முறையாக பங்குகளில் அதிகளவில் முதலீடு செய்தனர். இது தொடர்ந்தால் இந்திய சந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 80 தாண்டி கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. வரும் வாரத்தில் ரூபாய் மதிப்பு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதே சந்தையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து 100 டாலருக்கும் குறைவாக (அமெரிக்க கச்சா எண்ணெய்) உள்ளது.

கச்சா எண்ணெய்

சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இந்த வாரம் தங்களது முக்கிய பொருளாதார புள்ளிவிவரங்களை வெளியிட உள்ளன. இதுதவிர, பருவமழை நிலவரம், சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலவரங்களும் இந்திய பங்குச் சந்தைகளில் உயர்வு, தாழ்வை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணிகளாக இருக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.