வர்த்தக துளிகள்.. உலகின் மெகா கோடீஸ்வரர்களை காட்டிலும் அதிகம் சம்பாதிக்கும் கவுதம் அதானி..

 
கவுதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி ப்ளூம்பெர்க்கின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியிலில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும், இந்த ஆண்டில் எலான் மஸ்க் உள்பட உலகின் மெகாகோடீஸ்வரர் பட்டியலில் உள்ளவர்களை காட்டிலும் கவுதம் அதானி அதிகளவில் வருமானம் ஈட்டியுள்ளார். கவுதம் அதானி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் ரூ.2.88 லட்சம் கோடி (3,600 கோடி டாலர்) வருமானத்தை சேர்த்துள்ளார்.

வருமான வரி கணக்கு தாக்கல்

பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாளாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் (டிசம்பர் இறுதி வரை) வழங்கப்பட்டது. இந்நிலையில் 2021-22ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை (ஜூலை 31) நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்து விட்டது. இதனால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோம் இன்னும் 6 தினங்களுக்குள் தாக்கல் செய்து விடுங்கள்.

மதுபானங்கள்

மாநில அரசுகள் தங்களது நிதி நிலையை மேம்படுத்தும் வகையில், மதுபானங்கள் மற்றும் சொத்து வரி மீதான கலால் வரியை அவ்வப்போது திருத்தியமைக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், திட்டங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளும்படியும் மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

விமான பயணம்
கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் உள்நாட்டு விமான பயணிகள் போக்குவரத்து 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அதாவது, 2022 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் உள்நாட்டு விமானங்களில் 5.72 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அதேவேளையில், 2021 ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலத்தில் 3.43 கோடி பேர் உள்நாட்டு விமானங்களில் பறந்து இருந்தனர்.