வர்த்தக துளிகள்.. 5ஜி சேவைக்கான கட்டணம் 4ஜி காட்டிலும் 20 சதவீதம் வரை அதிகமாக இருக்கும்

 
5ஜி

நம் நாட்டில் முதல் முறையாக  5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு சந்தாதாரர் வாயிலான சராசரி வருவாய் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில், 5ஜி திட்டங்களுக்கான விலையை 4ஜி சேவைகளை காட்டிலும் 10 முதல் 20 சதவீதம் அதிகமாக நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களை கவரும் நடவடிக்கைகளால் காலப்போக்கில் 5ஜி சேவைகளின் விலை 4ஜி விகிதங்களுக்கு நெருக்கமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சி-பேண்ட் அலைக்கற்றைகளில் வழங்கப்படும் 5ஜி மொபைல் பிராட்பேண்ட் சேவைகள் 4ஜி விட 10 மடங்கு வேகமான டேட்டா வேகத்தை வழங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ளன.

போர்டிங் பாஸ்

தற்போது விமான பயணி ஒருவர் வெப் செக்-இன் முடிக்காமல் மற்றும் விமான கவுன்டரில் போர்டிங் பாஸ் (விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி சீட்டு) கோரினால், அவர்களுக்கு பிசிக்கல் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் ரூ.200 வசூலிக்கின்றன. இந்நிலையில், விமான நிலைய செக்-இன் கவுன்டர்களில் போர்டிங் பாஸ் வழங்க கூடுதல் பணம் எதுவும் வசூலிக்க வேண்டாம் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை விமான பயணிகள் வரவேற்றுள்ளனர்.

கோதுமை

பருவமழை காரணமாக சப்ளை குறைந்தது மற்றும் அரவை ஆலைகளில் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கடந்த 6 வாரங்களில் கோதுமை விலை 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் கோதுமை மாவு, மைதா, பிஸ்கட், ரவை போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். சிறு வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் கையிருப்பில் உள்ள கோதுமை கையிருப்பை விற்று விட்டனர். அதேவேளையில், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரிய வணிகர்கள் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்த்து கோதுமையை இருப்பு வைத்துள்ளனர் என வர்த்தகர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு முதல்முறையாக அரவையாளர்களுக்கு கோதுமை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்பேக் உள்ள வாகனம்

நம் நாட்டில் தற்போது தயாரிக்கப்படும் கார்களில் 2 ஏர்பேக் கட்டாயம் பொருத்தியிருக்க வேண்டும். இந்நிலையில் சாலை போக்குவரத்தில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும், கார்களின் பாதுகாப்பை உயர்த்தும், 8 பேருக்கு மேல் அமர்ந்து செல்லும் கார்களுக்கு குறைந்தபட்சம் 6 ஏர்பேக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், 8 பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் 6 ஏர்பேக்குகளை கட்டாயம் பொருத்துவதுவதற்கான செயல்திட்டத்தை விவாதிக்க அடுத்த வாரம் வாகன துறையை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.