முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 630 புள்ளிகள் உயர்வு..

 
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 630  புள்ளிகள் அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. மத்திய அரசு பெட்ரோலுக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ்  உள்பட மொத்தம் 22 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. மகிந்திரா அண்ட் மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 8 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 

டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,926 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,431 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 132 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.258.12 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.58 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 629.91 புள்ளிகள் உயர்ந்து 55,397.53 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 180.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,520.85 புள்ளிகளில் முடிவுற்றது.