வர்த்தக துளிகள்... தயிர், மோர் மற்றும் லஸ்ஸி விலை உயர வாய்ப்பு..

 
லஸ்ஸி

ரீ பேக் செய்யப்பட்ட, மறுசீரமைக்கப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட மோர், தயிர் மற்றும் லஸ்ஸி மீதான ஜி.எஸ்.டி. விலக்குகளை நீக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்தது. இதன் விளைவாக தயிர், லஸ்ஸி மற்றும் மோர் ஆகியவற்றின்  விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவின் விளைவாக, பால் நிறுவனமான அமுல் இந்த பொருட்களின் பொருட்களின் விலையை மாற்றியமைக்கலாம் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பணவீக்கம்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சமீபத்திய ஆய்வறிக்கையில், சர்வதேச மந்தநிலை மற்றும் பொருளாதாரத்தில் நீடித்த தேக்க நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 20 முதல் 30 சதவீதம் மட்டுமே உள்ளது. மேலும், 2023 மார்ச் மாதத்துக்குள் இந்தியாவின் சில்லரை விலை பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.01 சதவீதமாக இருந்தது.

சமையல் எண்ணெய்

கடந்த ஜூன் மாதத்தில் நம் நாடு 9.91 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. இதில் 9.41 லட்சம் டன் சமையன் எண்ணெய்யும், சமையல் எண்ணெய் அல்லாத எண்ணெய் 50,179 டன்னும் அடங்கும். 2021 ஜூன் மாதத்தில் வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 9.96 லட்சம் டன் தாவர எண்ணெய் இறக்குமதியாகி இருந்தது என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வங்கிகள் இணைப்பு

2017ம் ஆண்டில் நம் நாட்டில் மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட பிறகு தற்போது பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், 4 முதல் 5 பெரிய வங்கிகளை வைத்திருக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு அடுத்து சுற்று பொதுத்துறை வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளை (தற்போது ஆய்வு பணிகள்) மேற்கொண்டு வருவதாக மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.