வர்த்தக துளிகள்... அன்னிய கரன்சி டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகள்..

 
எப்.சி.என்.ஆர். டெபாசிட்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட நாட்டின் முன்னணி வங்கிகள் அன்னிய கரன்சி (எப்.சி.என்.ஆர்.) டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. உதாரணமாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஒராண்டு கால அமெரிக்க டாலர் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை  1.80 சதவீதத்திலிருந்து 2.85 சதவீதமாகவும்,  3 முதல் 4 ஆண்டுகள் வரையிலான அமெரிக்க டாலர் டெபாசிட்களுக்கான  வட்டி விகிதத்தை 2.30 சதவீதத்திலிருந்து 3.10 சதவீதமாகவும், 5 ஆண்டு கால அமெரிக்க டாலர் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 2.45 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

2023ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தில் 4.7 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி ஏற்படும் என நொமுரா ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். முதலில் பொருளாதாரத்தில் 5.4 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என கணித்து இருந்தனர். அதிக பணவீக்கம், கடுமையான நிதிக்கொள்கை, செயலற்ற தனியார் முலதன வளர்ச்சி, மின் நெருக்கடி மற்றும் சர்வதேச  மந்த நிலை போன்றவை பொருளாதார வளர்ச்சிக்கு நடுத்தர கால  சிக்கலாக இருக்கும் என்பதால் அடுத்த ஆண்டு வளர்ச்சி குறையும் என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கார்கள்

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் புள்ளிவிவரத்தின்படி, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 19 சதவீதம் உயர்ந்து 2.75 வாகனங்களாக உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர் மற்றும் மோட்டார் சைக்கிள்) விற்பனை 10.60 லட்சத்திலிருந்து 13.08 லட்சமாக அதிகரித்துள்ளது. 3 சக்கர வாகனங்கள் விற்பனை 9,404லிருந்து 26,701ஆக உயர்ந்துள்ளது.

அமித் ஷா

மத்திய சுரங்க அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமித் ஷா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அமித் ஷா பேசுகையில்,  8.2 சதவீத வளர்ச்சியுடன் இந்திய பொருளாதாரம் தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகும். இந்தியாவின் உயர் வளர்ச்சிக்கு நாட்டின் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை பங்காற்றுகிறது என்று தெரிவித்தார்.